📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 31 ஜூலை, 2026

மீன் எங்கே? விழி எங்கே? - ஒரு தமிழ்க் கவிதையின் அற்புதக் கற்பனை! | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கியம் என்பது வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமன்று; அது உணர்ச்சிகளின், கற்பனைகளின் வண்ணக் களஞ்சியம். குறிப்பாக, சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய சிற்றிலக்கிய காலத்திலும் பெண்பாற்

புலவர்களும் கவிஞர்களும் பெண்களின் அழகை வருணித்த விதம் இணையற்றது.

அத்தகைய ஒரு கவிதை நுட்பத்தை, பெண்ணின் நயமிக்க விழி அழகைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு எளிய அழகான பாடலின் வழியே இக்கட்டுரையில் காண்போம்.

பாடல்: தாமரைப் பொய்கையில் ஒரு மயக்கம்

தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்

மொண்டு நீரைமு கத்தரு கேந்தினாள்

கெண்டை கெண்டையே னக்கரை யேறினாள்

கெண்டை காண்கிலள் நின்றுத யங்கினாள்

பாடலின் எளிய விளக்கம்

தாமரைத் தண்டுகள் நீரில் மெல்ல அசைந்தாடும் ஒரு பொய்கை (குளம்). அதில் ஒரு பெண் இறங்கி, தன் இரு கரங்களாலும் நீரை முகர்ந்து, முகத்திற்கு அருகே ஏந்திப் பிடிக்கிறாள்.

அப்போது, அந்த நீரில் அவளது முகத்தின் பிம்பம் விழுகிறது. அதில் அவளது இரு கண்களும் பிரதிபலிக்கின்றன. கரையில் நின்றிருந்த அவள், நீரில் பிரதிபலித்த தன் கண்களைப் பார்த்து, "அடடா! குளத்தில் இருக்கும் கெண்டை மீன்கள் எப்போது இக்கரைக்கு ஏறி வந்தன?" என்று வியக்கிறாள்.


அடுத்து, தன் முகத்தில் இருக்க வேண்டிய கண்களை நீரிலேயே தேடிப் பார்க்கிறாள்; அங்கு கண்கள் தனியாகத் தெரியவில்லை. "என் கண்கள் எங்கே போயின?" என்று அறியாமல் தயங்கி நிற்கிறாள்.

அதாவது, அவளது கண்கள் கெண்டை மீன்களைப் போலவே அத்தனை சுறுசுறுப்பாகவும் அழகாகவும் வடிவாகவும் இருந்ததால், தன் கண்களையே மீன்கள் என்று கருதி அவள் மயங்கினாள் என்பதை இப்பாடல் நயம்படக் கூறுகிறது.

கவிதையின் அணி நயங்கள் (Figures of Speech)

இப்பாடல் வெறும் வருணனை மட்டுமல்ல; தமிழிலக்கணத்தின் முதன்மையான அணிகள் இதில் அழகுறப் பின்னிப் பிணைந்துள்ளன.

  • உவமையணி (Simile):

    தமிழ் இலக்கிய மரபில் பெண்ணின் கூர்மையான, அசைந்தாடும் கண்களுக்கு மீனை உவமிப்பது வழக்கம் (கயல்விழி, மைவிழி). இங்கு பெண்ணின் விழிகளுக்குக் கெண்டை மீன் உவமையாகக் கையாளப்பட்டுள்ளது.

  • தற்குறிப்பேற்ற அணி (Poet's Conceit):

    இயல்பாக நீரில் விழும் முகத்தின் நிழலை (பிரதிபலிப்பை), கவிஞன் தன் கற்பனைத் திறத்தால் "நீரிலிருந்து கரைக்கு ஏறிய கெண்டை மீன்கள்" என்று பெண்ணே எண்ணி மயங்குவதாகக் கவித்துவ ஏற்றம் செய்து கூறியுள்ளார்.

  • மயக்கவணி :

    ஒரு பொருளைக் கண்டு, அது வேறொரு பொருள் தானோ என மயங்குவதே மயக்கவணியாகும். தன் முகத்தின் பிரதிபலிப்பில் உள்ள கண்களை உண்மையான மீன்கள் என்று அப்பெண் மயங்கியதால், இது மயக்கவணிக்கும் சிறந்த சான்றாகிறது.

சொல்லிலக்கண நயங்களும் ஓசை இன்பமும்

பாடலின் சொற்கள் அமைந்த விதம், படிக்கும்போதே ஒரு இனிய சந்தத்தை நமக்குத் தருகிறது:

1. மோனை நயம் (Alliteration)

சீர்களிலோ அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.

  • ண்டு - தாமரை

  • கெண்டை - கெண்டையே

2. எதுகை நயம் (Rhyme)

அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. இப்பாடலில் 'ண்' என்ற நகரம் அடிதோறும் அமைந்து பாடலுக்கு நெகிழ்வான ஓசையைத் தருகிறது.

  • ண்டு

  • மொண்டு

  • கெண்டை

  • கெண்டை

3. இயைபு நயம் (Rhythm)

பாடலின் இறுதிச் சொற்கள் ஒரே விகுதிய பெற்று முடிவது இயைபு எனப்படும்.

  • ஏந்தினாள், ஏறினாள், தயங்கினாள் என 'னாள்' என்ற விகுதியில் முடிந்து பாடல் வரிகளுக்கு மெல்லிசையைச் சேர்க்கிறது.

பொருள் நயத்தின் உச்சம்

தன் முகத்தில் உள்ள கண்கள் தண்ணீரில் தெரிவதைப் பார்த்து, அவை மீன்கள் என நினைத்துத் திகைப்பது; பிறகு தன் முகத்தைத் தொட்டுப் பார்த்து கண்கள் அங்கேயே இருப்பதை உணர்வது - இந்தச் சிறிய இடைவெளியில் அப்பெண் அடையும் திகைப்புதான் இக்கவிதையின் உயிர்நாடி.

பெண்ணின் விழிகள் எந்த அளவிற்கு மீனைப் போன்று அழகாக இருந்தால், அவளுக்கே இந்த மயக்கம் வரும்? கவிஞனின் இத்தகைய கற்பனைத் திறன், தமிழ் மொழியின் வளத்திற்கும் கவித்துவ ஆழத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குறிப்பு

சர்வதேச பாடசாலையொன்றின் தமிழ்ப்பாட ஆசிரியராக நான் கடமையாற்றுவதால், அப்பாடசாலை மாணாக்கரின் தேவைப்பாடு கருதி,  சில சொற்களை ஆங்கிலத்திலும் இணைத்திருக்கிறேன் என்பதை கருத்திற் கொள்ளவும். 

- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

#VIVEGASHINTHAMANI #TAMILLITERATURE #SUDARTAMIL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days