இராமன் இலக்குமணனிடம் சுக்கிரீவன் குறித்து ஆவேசப்பட்டு கூறியவை எவை?
இராமன் கூறிய கார்கால் எல்லையாகிய நான்கு மாதங்கள் கழிந்தும் சுக்கிரீவன் வரவில்லை; சொன்ன சொல்லையும் அவன் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றான். நமது உதவியாலேயே பெறுதற்கரிய அரச செல்வமும் இழந்த மனைவியும் திரும்பக் கிடைத்தனவென்பதையும் மறந்துவிட்டான். நல்லொழுக்கமான மேன்மையிலிருந்தும் நீங்கிவிட்டான். செய்ந்நன்றியை முற்றிலும்
மறந்துபோனான். நம்மிடமுள்ள நட்பு ஒருபுறமிருக்க நமது பேராற்றலையும் வீரத்தையும் அறியாமல் போனான். புதிதாகக் கிடைத்த அரசுடனும் மனைவியுடனும் சுகபோகத்தில் திளைக்கிறான் போலும் என்று இராமன் இலக்குமணனிடம் சுக்கிரீவன் குறித்து ஆவேசப்பட்டு கூறினான். இராமன் இலக்குமணனை கிட்கிந்தைக்குச் சென்றுவரப் பணித்த காரணம் என்ன?
குறிக்கப்பட்ட கால எல்லையாகிய கார்காலம் முடிந்தும் சுக்கிரீவன் வராமையினால் கிட்கிந்தைக்குச் சென்று அவனது உள்ளக்கருத்தினை அறிந்து வரும்படியாக இராமன் இலக்குமணனைப் பணித்தான்
. இலக்குமணனின் வருகைக்கஞ்சி குரங்குகள் காட்டுக்குள் சென்று ஒழிந்துகொண்டமை எதற்கு உவமிக்கப்பட்டுள்ளது?
இலக்குமணனின் வருகைக்கஞ்சி குரங்குகள் காட்டுக்குள் சென்று ஒழிந்துகொண்டமையால், குரங்குகள் இல்லாத கிட்கிந்தை மலையானது நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயம், அந்த நட்சத்திரங்கள் மறைந்துபோனபின் பொலிவற்று விளங்குவதற்கு உவமிக்கப்பட்டுள்ளது
. இலக்குமணனைத் தடுக்க அனுமன் தாரையிடம் கூறிய உபாயம் என்ன?
ஆராய்ந்தெடுக்கப்பட்ட ஆபரணங்கள் அணிந்த சில பெண்களுடன் தாரையும் சென்று இலக்குமணன் வரும் வழியில் அரண்மனை வாயிலில் அவனைத் தடுத்துவிட்டால், பெண்கள் நிற்கும் வழியில் இலக்குமணன் தொடர்ந்துவர விரும்பமாட்டான். இதுவே அவனைத் தடுப்பதற்குரிய தகுந்த உபாயமென்று அனுமன் தாரையிடம் கூறினான்
. தாரை இலக்குமணனைத் தடுத்து நின்ற காட்சி எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது?
இயற்கையிலேயே நறுமணம் வீசுகின்ற கூந்தலையுடைய தாரை இலக்குமணன் வரும் வழியில் குறுக்கிட்டு, மென்மைத் தன்மையும் வெண்மையான பற்களையும் சங்கு வளையல்களையும் மின் ஒத்த இடையையும் உயர்ந்த இளம் தளங்களையும் கொண்ட நற்குடியில் பிறந்த மயில் போன்ற சாயலையுடைய வானமகளிரின் கூட்டத்துடன் சேர்ந்து வந்து இலக்குமணனை வழிமறித்தாள்
. வானரப் பெண்களால் சூழப்பெற்ற இலக்குமணன் உள்ளம் கூசி நின்ற நிலை எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது?
இலக்குமணன் தனது தாமரை போன்ற முகத்தைச் சாய்த்து, தலைகுனிந்து, தனது பெரிய வில்லைத் தரையில் ஊன்றிக் கொண்டு, மாமிகள் சூழ்ந்துள்ள கூட்டத்திற்கு நடுவில் நிற்கும் புதுமருமகள் அவர்களை ஏறெடுத்துப் பார்க்க எவ்வாறு தயங்குவானோ அதுபோல உள்ளம் கூச்சமுற்று நின்றான்
. தாரை இலக்குமணனை எவ்வாறு புகழ்ந்து பேசினாள்?
இலக்குமணன் அவர்களது மனைக்கு எழுந்தருளியதனால் அவர்களின் தீவினைகள் நீங்கப் பெற்று இப்பிறப்பில் நலவாழ்வும் மறுமையில் நற்கதியும் பெற்றோம்; இதைவிட வேறு நன்மை உண்டோ? என்று தாரை இலக்குமணனை புகழ்ந்து பேசினாள்
. இலக்குமணனை வழிமறித்த தாரை அவனிடம் யாது வினவினாள்?
வீரனே! நீ சீற்றம் கொண்டு வருவதைக் கண்ட வானர வீரர்கள் அச்சம் கொண்டுள்ளனர். வந்த காரணத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் என்னை அணுகி உனது உள்ளக்கருத்தை அறிந்து வரும்படி கூறினார்கள். எனவே மைந்தனே! இராமனை விட்டுப் பிரியாத நீ இப்பொழுது இராமனைப் பிரிந்து இங்கு தனியாக வந்துள்ளதன் நோக்கம் என்னவென்று கேட்டாள்
. "வெய்தின் நீ வருதல் நோக்கு வெருவிநின் சேனை வீரர்
செய்திதான் உணர்கிலாது திருஉளம் தெரித்தி என்றார்"
எப்பொழுதும் ஆணைச் சக்கரத்தையுடைய இராமனின் திருவடிகளைவிட்டு இமைப்பொழுதும் பிரியாதவன் நீ; எப்படி அவனை விட்டுப் பிரிந்து தனியாக வந்துள்ளாய்? இராமன் இலக்குமணனின் உயர்வான பண்பை எடுத்துரைத்தார்
. தாரையின் முகம் கண்ட இலக்குமணன் மனதிற்குள் என்ன நினைத்து வருந்தினான்?
விதவைக் கோலத்தில் தோன்றிய தாரையைக் கண்டதும் இலக்குமணன், தன் தாயாராகிய சுமித்திரை, கோசலை முதலியோரும் இவ்வாறுதானே கைமைக் கோலத்தில் இருப்பார்கள் என்றெண்ணித் தன் கண்கள் கண்ணீர் சிந்தக் கலங்கி நின்றான்
. பின்வரும் கூற்றுக்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களை விளக்குக.
அ. "உரை பொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்"
யாரால்: இராமனால்
யாருக்கு: இலக்குவனுக்கு
எச்சந்தர்ப்பத்தில்: கார்காலம் கடந்தும் சுக்கிரீவன் வராமையால் இராமனும் இலக்குமணனும் அதுபற்றி ஆலோசிக்கும்போது
ஆ. "மைந்த நின் பாதம் கொண்டு எம்மனை வரப்பெற்று வாழ்ந்தோம்"
யாரால்: தாரையால்
யாருக்கு: இலக்குமணனுக்கு
எச்சந்தர்ப்பத்தில்: கோபத்துடன் வந்த இலக்குமணனை வானர மகளிர் கூட்டத்துடன் சென்று தாரை வழிமறித்தபோது
இ. "ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரியுலா தியற்றியது என்னை?"
யாரால்: தாரையால்
யாருக்கு: இலக்குமணனுக்கு
எச்சந்தர்ப்பத்தில்: இலக்குமணனை வழிமறித்த தாரை அவனைப் புகழ்ந்து பேசிய பின்னர் இவ்வாறு கூறப்பட்டது
கம்பராமாயணம் கிட்கிந்தை படலத்தில்
அ. தாரை இலக்குமணனை புகழ்ந்து பேசியமை
வீரனே அளவற்ற காலம் தவம் புரிந்தாலன்றி நீ உன் திருவடி நோக எங்கள் மனைக்கு எழுந்தருளி இருப்பது சாத்தியமாகுமோ?
"அந்தம் இல் காலம் நோற்ற... எய்தலாம் இயல்பீற்றாமோ?"
மைந்தனே உன் திருவடிகள் எமது மனைக்கு வரப்பெற்றதால் அதாவது நாங்கள் செய்த தவத்தின் பயன் நீ வரப்பெற்றமை இதனால் பெறும்பேறு பெற்று வாழ்ந்தோம்.
"நின்பாதம் கொண்டு எம்மனை வரப்பெற்று வாழ்ந்தோம்"
இப்பிறப்பில் நல்வாழ்வும் மறுமையில் நற்கதியும் பெற்று எங்கள் தீவினைகள் எல்லாம் அகன்று பிறப்பிற்கான உய்வினைப் பெற்றுவிட்டோம்.
"உயர்ந்தனம் வினையும் தீர்ந்தோம்"
நீ வந்து திருப்பாதம் எடுத்து எம் மனையில் வைத்ததால் உய்வடைந்தோம் என உயர்நிலையில் வைத்து இலக்குமணனைப் புகழ்ந்தமை.
"உறுதி வேறு இதனின் உண்டோ?"
பசப்பு வார்த்தைகளால் இலக்குமணனின் வலிந்த மனதின் கோபத்தை இழக்கச்செய்த பெருமை தாரைக்குரியது
.
ஆ. இலக்குமணனின் சிறப்புக்கள்
ஆண்களில் சிறந்தவனும் சிங்கம் போன்றவனுமான இலக்குமணன் ("ஆண்தகை ஆளி...")
சிந்தித்து முடிவெடுக்கும் இலக்குமணன் பெண்கள் நிற்கின்ற நீண்டவழி செல்வதை நினைக்கமாட்டாமை ("நினையும் வீரன் அந்நீள்நெறி நோக்கலான்...")
கழுத்திலிடும் கயிறுடைய யானையைப் போன்றவன் ("பிரசை யானை அன்னான் புகழோடும்")
பருத்த மலை போன்ற தோளை உடையவன் ("அப்பருவகை அனைய தோளான்")
தாமரை போன்ற முகத்தை உடையவனான இலக்குமணன் தலைகுனிந்து தன்னுடைய பெரிய வில்லைத் தலையில் ஊன்றியிருப்பவன் ("தாமரை வதனம் சாய்த்து தனு நெடுந் தரையின் ஊன்றி")
இப்பிறப்பில் நல்வாழ்வும் மறுமையில் நற்கதியும் பெற்று எங்கள் தீவினை எல்லாம் நீங்கச் செய்தவன் ("மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வரப்பெற்று வாழ்ந்தோம்")
வீரம் மிக்கவன்
மலர்மாலை அசைந்தாடி ஒளிவீசும் மார்பினை உடையவன் ("தார் குலாம் அலங்கல் மார்பன்")
கருணை நிறைந்தவன்
இ. கைம்மை மகளிர் எவற்றை விட்டொழிப்பர்?
மங்கல நாணை நீங்குதல்
அணிகலங்களைத் தவிர்த்தல்
மலர் மாலைகளை அணியாது விடுத்தல்
குங்குமம், சந்தனம் போன்றவற்றை பூசாது விடுதல் (மங்கல அணியை நீக்கி, மலர் மாலையைத் துறத்தல்)
இப்பாடல் பகுதியில் இராமனது சிறப்புக்கள்
மூத்தவன், வீரன்
சிங்கம் போன்றவன்
சுக்கிரீவனுக்கு அரச செல்வத்தைப் பெற்றுக்கொடுத்தவன்
சுக்கிரீவனின் மனைவியை திரும்பக் கிடைக்கச் செய்தவன்
சுக்கிரீவனை தண்டிப்பதற்கு முன்னதாக அவனது உள்ளக் கருத்தினை அறிய விரும்பியவன்
ஆணைச் சக்கரத்தை உடையவன்
இலக்குமணனுடைய சிறப்புக்கள்
வலிமை மிக்கவன், வீரன்
ஆண்களில் சிறந்தவன்
சிங்கம் போன்றவன்
சிந்தித்து முடிவெடுபவன்
பெண்கள் நிற்கின்ற வழியில் செல்ல நினையாதவன்
கழுத்திலிடும் கயிறுடைய யானையைப் போன்றவன்
வெற்றியும் மேன்மையும் பொருந்தியவன்
பருத்தமலை போன்ற தோள்களை உடையவன்
மகளிரை ஏறெடுத்துப் பார்ப்பதற்கு அஞ்சுபவன்
தாமரை போன்ற முகத்தினை உடையவன்
ஆணைச்சக்கரத்தையுடைய இராமபிரானின் திருவடிகளை விட்டு இமைப்பொழுதும் பிரியாத இயல்புடையவன்
மலர் மாலைகள் அசைந்தாடி ஒளிவீசும் மார்பினை உடையவன்
தாரையின் விதவைக் கோலத்தைக் கண்டு வருந்தியவன்
கருணை மிகுந்தவன்
தாரையின் நிலை கண்டு தன் தாயாரின் நிலையை எண்ணியும் கண்ணீர் சிந்திக் கலங்கியவன்
தாரையின் பாத்திரச் சிறப்பு
இலக்குமணனிடம் சென்று அவனது உள்ளக்கருத்தை அறிய முற்பட்டவள்
. தனது உறுதியான கொள்கையில் இருந்து பின்வாங்காத பெருமையுடையவள்
. இயற்கையிலேயே நறுமணம் கமழும் நீண்ட கூந்தலையுடையவள்
. அழகிய தோள்களை உடையவள். தூய்மையான மாசற்ற உள்ளத்தினை உடையவள். நீண்ட கண்களையுடையவள்
. இசைப் பாட்டைவிட இனிமையான சொற்களைப் பேசுபவள்
. ஒளி மழுங்கிய முகத்தினையுடையவள்
. மங்கலநாண் நீங்கப் பெற்றவள்
. அணிகலன்களையும் தவிர்த்தவள்
. மலர்மாலைகளையும் அணியாது விடுத்தவள்
. குங்குமம், சந்தனம் ஆகிய கலவைகளைத் தன் மார்பில் பூசாது விடுத்தவள் (விதவை என்பதால்)
. கணவனை இழந்தவள்
.
சுக்கிரீவன் என்ற பாத்திரத்தின் இயல்பு
சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவன்
செய்ந்நன்றி மறந்தவன்
பெறுவதற்கரிய அரச செல்வத்தையும் இழந்த மனைவியையும் இராமனின் உதவியால் மீண்டும் பெற்றவன்
இராமன் செய்த உதவியை மறந்து அவன் நீட்டிய நட்புக்கரத்தையும் அறுத்துவிட்டு வாய்மையையும் நீக்கியவன்
வானர மகளிர் பற்றிய சித்தரிப்பு
ஆராய்ந்து தெரிந்து எடுக்கப்பட்ட வளையல்களை அணிந்தவர்
நீண்டு தாழ்ந்து தொங்குகின்ற கூந்தலை உடையவர்
மென்மையான தன்மையும் வெள்ளிய பற்களையும் சங்குகளால் ஆகிய வெண்மையான வளையங்களையும் மின்னல்போல் ஒளிர்கின்ற நுட்பமான இடையையும் உயர்ச்சியும் இளமையும் கொண்ட மெல்லிய கொங்கையையும் நற்குடியில் பிறந்த மயில்போலும் சாயலையும் உடையவர்கள்
விற்படைபோலவும் வாட்படை போலவும் ஒளிவிட்டு பிரகாசிக்கும் ஆபரணங்களை அணிந்தவர்கள்
காலில் அணிந்துள்ள சிலம்புகளின் உள்ளிருக்கும் பால்கற்கள் ஒளி செய்யும்
முரசம் போல் ஒலி எழுப்பும் மேகலையை இடையில் அணிந்திருத்தல்
பலவகைப்பட்ட கொடிகள் போன்ற புருவங்கள்
பேரிகை போன்று ஒலி செய்யும் சிலம்புகளைக் காலில் அணிந்திருத்தல்
வேற்படையாகிய கண்கள், விற்படையாகிய புருவங்கள்
தேவமகளிர் போன்றவர்
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
புதன், 5 ஆகஸ்ட், 2026
கிட்கிந்தைப் படலம் - வினா விடைகள் | எஸ். ஆனந்தன்
சுடர் தமிழ் இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்... உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் அறியக் கொடுங்கள். தமிழுக்கு அணி சேர்ப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days