📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜூலை, 2026

நாயக்கர் காலத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி | காளமேகம் மற்றும் மக்கள் இலக்கியங்கள் | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கிய வரலாற்றில் விஜயநகர - நாயக்கர் காலம் (கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை) ஒரு தனித்துவமான காலகட்டமாகும். பேரிலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் பக்திப் பாடல்களின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கிய உலகம், இக்காலகட்டத்தில் எளிய மக்களை நோக்கியும், சிற்றிலக்கிய வடிவங்களை நோக்கியும் நகர்ந்தது. அரசர்களின் ஆதரவு, சமூக மாற்றங்கள் மற்றும் மொழிக் கலப்பு ஆகியவற்றின் விளைவாகத் தமிழ் இலக்கியம் புதிய பரிமாணங்களைப் பெற்றது. இக்கட்டுரையானது நாயக்கர் காலத்தில் செழித்தோங்கிய சிற்றிலக்கிய வடிவங்கள், அக்காலத்தின் ஆளுமையான காளமேகப் புலவரின் கவியாற்றல் மற்றும் அடிமட்ட மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்த பொதுமக்கள் சார்பான இலக்கியங்கள் குறித்து இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

1. விஜயநகர நாயக்கர் காலத்தில் வழக்கிலிருந்த சிற்றிலக்கிய வடிவங்கள்

நாயக்கர் காலத்தை "சிற்றிலக்கியங்களின் பொற்காலம்" என்று அழைக்கலாம். தொல்காப்பியம் குறிப்பிடும் 'விருந்தால்' ஆகிய புதுமை வடிவங்களாகவும், பிரபந்தங்கள் என்றும் இவை அழைக்கப்பட்டன. தொண்ணூற்றாறு வகை பிரபந்தங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இக்காலத்தில் பல வடிவங்கள் பெருமளவில் வழக்கிலிருந்தன:

  • தூது: அஃறிணைப் பொருட்களையோ அல்லது உயர்திணைப் பொருட்களையோ இறைவனிடமோ, தலைவனிடமோ தூது விடுவதாக அமைவது. (எடுத்துக்காட்டு: மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது).

  • உலா: இறைவன் அல்லது அரசன் வீதி உலா வரும்போது, அவனைக் கண்டு ஏழு பருவப் பெண்களும் (பேதை முதல் பேரிளம்பெண் வரை) காதல் கொள்வதாகப் பாடுவது.

  • பரணி: போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது. (எடுத்துக்காட்டு: தக்கயாகப் பரணி).

  • கலம்பகம்: பல்வேறு வகையான பாக்களாலும், உறுப்புகளாலும் கலந்து பாடப்படுவது. (எடுத்துக்காட்டு: மதுரைக்கலம்பகம்).

  • பிள்ளைத்தமிழ்: இறைவனையோ, அரசனையோ அல்லது பாட்டுடைத் தலைவனையோ குழந்தையாக உருவகித்து, பத்துப்பருவங்கள் அமைத்துப் பாடுவது. (எடுத்துக்காட்டு: மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்).

  • இதர வடிவங்கள்: அந்தாதி, மாலை, கோவை, சிலேடை வெண்பா, குறவஞ்சி மற்றும் பள்ளு போன்ற வடிவங்களும் இக்காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றன.

2. காளமேகப் புலவரின் கவியாற்றல்

நாயக்கர் காலத்து இலக்கிய ஆளுமைகளில் வசை பாடுவதிலும், நையாண்டி செய்வதிலும், சொல்லழகைக் கையாள்வதிலும் முதன்மையானவர் காளமேகப் புலவர். காரிருள் மேகம் போலக் கவி பொழியும் ஆற்றல் பெற்றதால் இவர் 'காளமேகம்' என அழைக்கப்பட்டார். இவருடைய கவியாற்றலின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

அ) ஆசு கவித்திறன் (உடனுக்குடன் பாடுதல்)

கேட்ட மாத்திரத்திலேயே, நொடிப் பொழுதில் கவி பாடும் 'ஆசுகவி' திறனில் இவர் சிறந்து விளங்கினார். சவால்களுக்குப் பதில் அளிப்பதிலும், சமகாலப் புலவர்களின் செருக்கை அடக்குவதிலும் இவரது பாடல்கள் அம்பு போலப் பாய்ந்தன.

ஆ) சிலேடை மற்றும் நயம்பட உரைத்தல்

ஒரு பாடலுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் தருமாறு பாடுவதில் (இருபொருள்படப் பாடுதல்) இவருக்கு நிகர் இவரே. பாம்புக்கும் எள்ளுக்கும், வைக்கோலுக்கும் யானைக்கும், தேங்காய்க்கும் நாய்க்கும் அவர் காட்டிய சிலேடை நயங்கள் வியக்கத்தக்கவை.

இ) வசைக்கவி (நையாண்டி மற்றும் நகைச்சுவை)

சமூகக் குறைபாடுகள், போலித் தனங்கள் மற்றும் தனக்கு நேர்ந்த இன்னல்களை நகைச்சுவையோடும் வசை கலந்தும் பாடினார். தாகத்திற்குத் தண்ணீர் தராத சத்திரத்தையும், சரியாகச் சமைக்காத சமையலையும் தன் பாடல்களால் வறுத்தெடுத்தார்.

ஈ) பக்தி மற்றும் காப்பியப் பங்களிப்பு

நகைச்சுவை மட்டுமன்றி, திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திரமடல் போன்ற பக்தி மற்றும் காப்பியச் சுவைமிக்க நூல்களையும் இயற்றித் தனது பன்முகக் கவியாற்றலை நிரூபித்தார்.

3. நாயக்கர் காலத்தில் தோன்றிய பொதுமக்கள் சார்பான இலக்கியங்கள்

நாயக்கர் காலத்திற்கு முந்தைய இலக்கியங்கள் பெரும்பாலும் அரசர்களையும், கடவுளர்களையும், உயர்குடி மக்களையும் மட்டுமே பாடுபொருளாகக் கொண்டிருந்தன. ஆனால், நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்களால் சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வியல், இலக்கியத்தின் மையப்பொருளாக மாறியது. இக்காலத்தில் எழுந்த முக்கிய பொதுமக்கள் சார்பான இலக்கியங்களாக முக்கூடற்பள்ளு, திருக்குற்றாலக் குறவஞ்சி, திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், இராமநாடகக் கீர்த்தனை, சித்தர் பாடல்கள் போன்றவற்றைப்பிடலாம்.

இப்பொதுமக்கள் சார்பான இலக்கியங்களின் முக்கிய பண்புகளாவன:

அ) சாதாரண பொதுமகன் பாட்டுடைத் தலைவனாதல்

இக்காலகட்டத்தின் மிகப்பெரிய புரட்சி, அரசர்களையும் தேவர்களையும் பாடுவதைத் தவிர்த்து, ஒரு சாதாரண பொதுமகன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இலக்கியங்கள் பாடப்பட்டமையாகும்.

ஆ) மக்களின் வாழ்க்கை முறை பாடப்படல்

மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகள், தொழில்சார் கூறுகள் மிக எதார்த்தமாகப் பாடப்பட்டன. உதாரணமாக, முக்கூடற்பள்ளு நூலில் சாதாரண பள்ளர்களைக் (உழவர்களைக்) கதை மாந்தர்களாகக் கொண்டு அவர்களின் உழவுத் தொழில், குடும்பப் பூசல்கள், வாழ்க்கை முறை என்பன எளிய பாமர மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இ) சித்தர் பாடல்களில் சாதிய எதிர்ப்பு

நாயக்கர் காலத்தில் வாழ்ந்த சித்தர்களின் பாடல்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் பெற்றன. தத்துவக் கருத்துக்களை எளிய தமிழில் பாடியதுடன், சமூகத்தில் மலிந்திருந்த சாதியக் கொடுமைகளுக்கு எதிரான சாதிய எதிர்ப்பினைப் பாடியமை இக்காலகட்டத்தின் மிக முக்கிய மக்கள் சார்பான புரட்சியாகும்.

ஈ) நாடகப் பாங்கும் இசைப் பாங்கும்

பொதுமக்கள் எளிதில் விளங்கி இரசிக்கும் வண்ணம் இவ்விலக்கியங்கள் கலைப் பாங்குடன் வடிவம் பெற்றன.

  • நாடகப் பாங்கு: உரையாடல்களுடனும் காட்சி அமைப்புகளுடனும் நாடகப் பாங்கில் இலக்கியங்கள் அமைந்தன. இதற்குச் சிறந்த உதாரணம் திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகும்.

  • இசைப் பாங்கு: பாடல்கள் எளிமையாகப் பாடி மகிழத்தக்க இசைப் பாங்குடன் இயற்றப்பட்டன. இதற்குச் சிறந்த உதாரணமாக இராமநாடகக் கீர்த்தனை திகழ்கிறது.

உ) நகைச்சுவை மற்றும் காமச்சுவை

மக்களின் உணர்வுகளுக்குத் தீனி போடும் வகையில் நகைச்சுவையும் காமச்சுவையும் இலக்கியங்களில் தாராளமாகக் கையாளப்பட்டன. இதற்குச் சிறந்த உதாரணமாக பிரபுலிங்கலீலை என்னும் நூல் அமைகிறது. அத்தோடு திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் போன்ற வடிவங்களும் இச்சுவைகளுடன் பாமர மக்களின் வாழ்வியலை நையாண்டி செய்யப் பயன்படுத்தப்பட்டன.

சுருங்கக் கூறின், விஜயநகர - நாயக்கர் காலம் என்பது தமிழ் இலக்கியத்தை அரண்மனை மாடங்களிலிருந்தும், ஆன்மீகக் கோபுரங்களிலிருந்தும் இறக்கி, பாமர மக்களின் தெருக்களுக்குக் கொண்டு வந்த பொற்காலமாகும். வண்ணமயமான சிற்றிலக்கிய வடிவங்கள், காளமேகப் புலவரின் அசாத்திய கற்பனை மற்றும் சிலேடைத் திறன், அடித்தட்டு மக்களின் வியர்வையையும், சாதிய எதிர்ப்பையும், கலைப் பாங்கையும் பாடிய மக்கள் இலக்கியங்கள் என இக்காலம் தமிழின் எல்லையை அகலப்படுத்தியது. தமிழ் மொழியின் நெகிழ்வுத்தன்மைக்கும், மக்கள்மயமாதலுக்கும் நாயக்கர் கால இலக்கியங்கள் ஆற்றிய பங்களிப்பு என்றும் போற்றத்தக்கதாகும்.

- கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days